ஆன்லைன் செய்தி மற்றும் ஓடிடி தளங்கள் ! இனி மத்திய மத்திய அரசின் கண்காணிப்பில் ?

இணையதளங்களில் பதிவேற்றப்படும் செய்திகள், நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் அனைத்தையும் மத்திய அரசின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் ஓடிடி மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருந்தது. தற்போது புதிய படங்கள், கிரிக்கெட் தொடர்கள் என்று பல விஷயங்கள் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களில் வெளியாகி வருகிறது.

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் திரையிடுவதற்கு முன்னரே படம் தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்படுகிற நிலையில், ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு இம்முறை செயல்படுத்துவதில்லை.

இதன் காரணமாக ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்களில் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாக தொடர்ச்சியாக புகார் எழுந்தது. இந்நிலையில், தற்போது இணையதளங்களில் பதிவேற்றப்படும் சினிமா, செய்திகள், நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் அனைத்தையும் மத்திய அரசு தகவல் ஒளிபரப்பு துறையின் கீழ் கொண்டுவந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ என்று நிறைய தளங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வர இருக்கின்றது. அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த தளங்கள் இனி செயல்படும். ஆனால் இதில் வரும் நிகழ்ச்சிகள் சென்சார் செய்யப்படுமா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.