Qualcomm நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய MediaTek !

மொபைல் சிப் சப்ளையர் பட்டியலில் குவால்காம் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய மீடியா டெக் நிறுவனம்.. 

அமெரிக்க சிப் நிறுவனமான குவால்காம் நிறுவனத்தை தைவான் நாட்டை சேர்ந்த மீடியா டெக் நிறுவனம் சிப் விற்பனையில் பின்னுக்குத் தள்ளி உள்ளது. கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச்சின் சமீபத்திய அறிக்கையில் 31 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டு மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சிப் சப்ளையர் ஆக மீடியா டெக் இருப்பதாக தெரிவிக்கிறது.

மேலும், 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மீடியாடெக் செயலிகளால் இயக்கப்படும் 100 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகின்றது. இதன் காரணமாக கடந்த இரண்டாவது காலாண்டில் 26 சதவீத இருந்த பங்குகள் தற்போது 31 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக குவால்காம் நிறுவனம் முதலிடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

குவால்காம் நிறுவனம் 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 29 சதவீத சந்தைப் பங்கை பதிவு செய்துள்ளது, இது முந்தைய காலாண்டில் 31 சதவீத பங்குகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாம் இடத்திற்கு குவால்காம் பின்னுக்கு தள்ளப்பட்டாலும், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 39 சதவீத பங்கைக் கொண்ட 5 ஜி chipset-களை வழங்குவதில் குவால்காம் இன்னும் மிகப்பெரிய வீரராக இருந்தது என்று கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.